இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.

sa vs in

வீராட்கோலியின் சதத்தால் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.

டர்பனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்தது. கேப்டன் டுபெலிசிஸ் 120 ரன்னும், கிறிஸ் மோரிஸ் 37 ரன்னும் எடுத்தனர்.

குல்தீப்யாதவ் 3 விக்கெட்டும், யசுவேந்திர சஹால் 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், பும்ரா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 54.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வீராட்கோலி 119 பந்தில் 112 ரன்னும் (10 பவுண்டரி), ரகானே 86 பந்தில் 79 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. தொடரின் முதல் ஆட்டத்திலேயே தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது முக்கியமானது. கடைசி டெஸ்டில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றது.

பேட்டிங்குக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்காவை 269 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருக்கிறது. வேகப்பந்து வீரர்கள் (பும்ரா, புவனேஷ்வர்குமார்) தொடக்கத்திலேயே 2 விக்கெட் எடுத்தது சிறப்பானது. இரண்டு சுழற்பந்து வீரர்களும் (குல்தீப்யாதவ், சஹால்) மிகவும் அபாரமாக வீசினார் கள். முதல் முறையாக தென்ஆப்பிரிக்காவில் விளையாடும் அவர்கள் வியக்கதக்க வகையில் செயல்பட்டனர். புத்திசாலித் தனத்துடன் இருவரும் செயல்பட்டனர்.

டர்பன் ஆடுகளத்தில் விளையாடியதை உள்ளூரில் ஆடியது போன்று இந்திய வீரர்கள் உணர்ந்தனர். ரசிகர்கள் ஆதரவு நன்றாக இருந்தது. இதனால் ரசித்து ஆடினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வெற்றி மூலம் 6 போட்டிக்கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 2-வது போட்டி வருகிற 4-ந்தேதி செஞ்சூரியனில் நடக்கிறது.