ஜொகன்னஸ்பர்க் டெஸ்ட்: 63 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

sa vs ind

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 187 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 194 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அம்லா 61 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியாவை விட 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா, 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 13 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

42 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. விஜய் 127 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். கோலி 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா வீசிய பந்தில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பாண்டியா 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய ரகானே 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷம்மி அதிரடியாக விளையாடினார். அவர் 27 ரன்கள் (1 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சில் வெர்னான் பிளாண்டர், ககிசோ ரபாடா, மோர்னே மார்கல் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். இதன்மூலம் தென்னாப்ரிக்கா அணி 241 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.

இதையடுத்து தென்னாப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கரும், மார்க்ராமும் களமிறங்கினர். மார்க்ராம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷம்மி பந்தில் பார்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹாசிம் அம்லா களமிறங்கினார். தென்னாப்ரிக்கா அணி 8.2 ஓவர்களில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து வெற்றிக்கு 224 ரன்கள் தேவை என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அம்லாவும் எல்கரும் நிதானமாக விளையாடினர். நேற்று ஆடுகளம் அபாயகரமாக இருந்தது. இருப்பினும் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக ஆடுகளம் சற்று ஈரமாக இருந்ததால், இன்று பந்து பெரிய அளவில் பவுன்சாகவில்லை. இது தென்னாப்ரிக்கா பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக அமைந்தது. அம்லா – எல்கர் இணைந்து 100 ரன் பாட்னர்ஷிப் கடந்தனர்.

இன்றைய நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஸ்சனின்போது அம்லா ஆட்டமிழந்தார். அவர் 52 ரன்களில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கியவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டி வில்லியர்ஸ் 6 ரன்களிலும், டூ பிளஸ்சிஸ் 2 ரன்களிலும், டீ காக் டக் அவுட்டும் ஆகினர். வெர்னான் பிளாண்டர் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பெஹ்லுக்வாயோ, ரபாடா, மோர்னே மார்கல் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகினர். அப்போது தென்னாப்ரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

அதைத்தொடர்ந்து நிகிடி களமிறங்கினார். நிகிடி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்ரிக்கா அணி 177 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. டீன் எல்கர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி பந்துவீச்சில் மொகமது ஷம்மி ஐந்து வீக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபப்பட்டார். தென்னாப்ரிக்கா அணியின் வெர்னான் பிளாண்டர் தொடர்நாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்ரிக்கா அணி 2-1 என கைப்பற்றியது. அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

maalaimalar