வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்ரிக்கா அபார வெற்றி

south

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி  2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 2 டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கடந்த 28-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி சார்பில் எல்கர், ஆம்லா ஆகியோர் சதமடித்தனர். ஒரு ரன்னில் எல்கர் இரட்டை சதத்தை தவறவிட்டார். இதைதொடர்ந்து 146 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 496 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்ரிக்க அணி டிக்ளேர் செய்தது.

இதைதொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணியில் மோமினுல் ஹக், மொகமதுல்லாவை தவிர மற்றவர்கள் தாக்குப் பிடிக்கவில்லை. அந்த அணி 89.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 320 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா அணி சார்பில் கேசவ் மகராஜ் 3 விக்கெட்டும், மார்கல், ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, தென் ஆப்ரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் டெம்பா பவுமா 71 ரன்களும், டூ பிளசிஸ் 81 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்க அணி 56 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்நிலையில் 424 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காளதேசம் அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது. ஆனால், தென் ஆப்ரிக்காவின் நேர்த்தியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 90 ரன்களில் சுருண்டது. இதனால் 333 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக இம்ருல் காயேஸ் மட்டும் 32 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். தென் ஆப்ரிக்க அணி சார்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட், ரபடா 3 விக்கெட் மற்றும் மார்கல் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டீன் எல்கருக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.