வங்காள தேசத்திற்கு இலங்கை பதிலடி: குசால் மெண்டிஸ், டி சில்வா சதத்தால் ரன் குவிப்பு

sl vs ban

வங்காள தேசம் – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் தமிம் இக்பால் (52), மொமினுல் ஹக்யூ (176), முஷ்டாபிஜூர் ரஹிம் (92), மெஹ்முதுல்லா (83 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 513 ரன்கள் குவித்தது.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருணாரத்னே, குசால் மெண்டிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கருணாரத்னே ரன்ஏதும் எடுக்காமல் மெஹிது ஹசன் மிராஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து குசால் மெண்டிஸ் உடன் தனஞ்ஜெயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருநாள் போட்டியில் விளையாடியதுபோல் ஆடி ரன்கள் குவித்தனர். டி சில்வா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 48 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்திருந்தது. தனஞ்ஜெயா டி சில்வா 104 ரன்னுடனும், குசால் மெண்டிஸ் 83 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


தனஞ்ஜெயா டி சில்வா

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சிறிது நேரத்தில் குசால் மெண்டிஸ் சதம் அடித்தார். தனஞ்ஜெயா டி சில்வா 150 ரன்னைக் கடந்தார். ஒரு வழியாக இலங்கையின் ஸ்கோர் 308 ரன்னாக இருக்கும்போது டி சில்வா 173 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் – தனஞ்ஜெயா டி சில்வா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது.

அடுத்து குசால் மெண்டிஸ் உடன் ரோசன் டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சதம் அடித்த குசால் மெண்டிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய குசால் மெண்டிஸ் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 196 ரன்னில் அவுட் ஆனார்.


குசால் மெண்டிஸ்

இலங்கை அணி 104.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்துள்ளது. ரோசன் சில்வா 37 ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போது வரை இலங்கை 98 ரன்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளதால் முன்னிலைப் பெற வாய்ப்புள்ளது. #BANvSL