5-வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை துவம்சம் செய்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்து நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்று ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி உபுல் தரங்கா, சமரவிக்ரமா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை உஸ்மான் கான் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் சமரவிக்ரமா ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சண்டிமல் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார். இதனால் இலங்கை அணி முதல் ஓவரில் 1 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் இழந்தது.

அதன்பின் உஸ்மான் கான் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் உபுல் தரங்கா (8), டிக்வெல்லா (0), ஸ்ரீவர்தனா (6) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 6.3 ஓவர்களில் 20 ரன்கள் எடுப்பதற்குள் இலங்கை 5 விக்கெட்டுக்களை இழந்தது. இந்த ஐந்து விக்கெட்டுக்களையும் உஸ்மான் கான் வீழ்த்தினார்.

அதன்பின் இலங்கை அணியால் சரிவில் இருந்து மீண்டு வர இயலவில்லை. அந்த அணி 26.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 103 ரன்னில் சுருண்டது. உஸ்மான் கான் 7 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஹசன் அலி, ஷதாப் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாகிஸ்தான் 20.2 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 205 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பகர் சமான் 48 ரன்னில் ஆட்டமிழந்தனர். இமாம் உல் ஹக் 45 ரன்னுடனும், பஹீம் அஷ்ரப் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்ற இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது