සිංහල
English
Contact
Tuesday 15th June 2021    
காணாமல் போனவர்களை இறந்தவர்களாக  ஏற்க மாட்டோம் ! -முன்னிலை சோஷலிஸக் கட்சி « Lanka Views

காணாமல் போனவர்களை இறந்தவர்களாக ஏற்க மாட்டோம் ! -முன்னிலை சோஷலிஸக் கட்சியுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் கடத்தப்பட்ட, சரணடைந்த, கைது செய்யப்பட்ட, பெற்றோர்களால் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க ஆட்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கரிடம் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஐ.நா. சபை பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி காணமல் போனவர்கள் சம்பந்தமாக குறிப்பிடும்போது அவர்கள இறந்தவர்களாக கருதப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து  காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவத்தில் முன்னிலை சோஷலிக் கட்சி கடிதமொன்றை கையளித்தது.

தலைவர்,
காணாமல்போன ஆட்கள் சம்பந்தமான அலுவலகம்,
சிராவஸ்தி இல்லம்,
இலக்கம் 32,
சர். மாகஸ் பர்னாந்து மாவத்த, கொழும்பு 07.
தலைவர் அவர்களே,
காணாமல்போன ஆட்களை இறந்துவிட்டவர்களாக ஏற்று மரணச் சான்றிதழ் வழங்குதல்
கடந்த காலங்களில் விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், பொதுவாக முழு நாட்டிலும் ஆட்களை கடத்திச் செல்வதும், காணாமலாக்கப்படுவதும் போன்ற சம்பவங்கள் நடைபெற்றமை குறித்து விசேடமாக சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அது ஊரரிந்த விடயமாகும். யுத்தத்தின் பின்னர் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம ஆணையம் சுமார் 25,000 காணாமலாக்கள்களை கண்டறிந்துள்ளதோடு, உங்களது நிறுவனமும் அவ்வாறான பல சம்பவங்கள் தொடர்பில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. வலுக்கட்டாயமாக காணாமலாக்கியமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழுவின் அறிக்கைக்கேற்ப அவர்கள் காணாமல் போன சுமார் 16,000 ஆட்களை கணக்கெடுத்துள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் மதிப்பீடானது குறைந்தபட்சம் 20,000 காணமலாக்கல்கள் இலங்கையில் இடம் பெற்றுள்ளதாகக் கூறுகிறது. காணாமலாக்கல் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு 18,476 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எவ்வாறாயினும் பத்தாயிரக்கணக்கானோர் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவு.
சில காணாமலாக்கல்கள் யுத்த சூழ்நிலையிலும், யுத்தகளத்திலும் நடந்துள்ளன. மேலும் அநேக காணாலாக்கல்களுக்கு யுத்தத்தோடு தொடர்பு கிடையாது. உதாரணமாக கொழும்பு மாலிகாவத்தை, மட்டக்குளி ஆகிய பகுதிககளை அன்மித்து இளைஞர்களை காணாமலாக்கியமை, ஊடகவியலாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் காணாமலாக்கப்பட்டமை மற்றும் யுத்த காலத்தில் பாதுகாப்புப் பிரிவுகளிடன் ஒப்படைக்கப்பட்டவர்கள் அல்லது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டமை போன்றவற்றை குறிப்பிட முடியும். எமது கட்சியின் இரண்டு செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய தோழர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதும் யுத்தம் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் கடந்த நிலையில், 2011 டிசம்பர் 09ம் திகதி யாழ்ப்பாணம் அதி பாதுகாப்பு வலயத்திலிருந்துதான். இந்த அனைத்து காணாமலாக்கல்கள் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான முதல் நடவடிக்கையாக அந்த காணாமலாக்கல்கள் சம்பந்தமாக முறையான விசாரணை நடத்தி அவர்கள் சம்பந்தமான உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
ஆனால், அதற்குப் பதிலாக காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் மரண சான்றிதழ் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர் ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது இதை அறிவித்தார். காணாமலாக்கல் தொடர்பிலான தீர்வு அவர்களை இறந்தவர்களின் பட்டியலில் சேர்ப்பதல்ல, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிக்கொணர்வதுதான். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் காணாலாக்கல்கள், கடத்தல்கள, அரசியல் கைதிகள், அரசியல் படுகொலைகள் போன்ற பிரச்சினைகளை நில அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக முகாமைத்துவம் செய்வதைத் தவிர அப்பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் நோக்கில் செயற்படவில்லை என்பதை எமது சமீபகால அனுபவங்கள் உறுதி செய்கின்றன. காணாமல்போன அனைவரையும் இறந்துவிட்டவர்களாக அறிவிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதாசீனப் போக்கு இதற்கு சிறந்த உதாரணமாகும்.
காணாமல்போன பலரின் உறவினர்களும் அவர்களுக்கு நெருக்மானவர்களும் அவர்களின் இறப்புச் சான்றிதழ்களை ஏற்கத் தயாராக இல்லை என்பதோடு, எங்களது இரு தோழர்களான லலித் மற்றும் குகன் இறந்துவிட்டதாகக் கூறப்படுவதை நாங்களும் ஏற்க மாட்டோமென உறுதியாகக் கூறுகிறோம். அவர்கள் இறந்துவிட்டதாக அரசாங்கம் சொன்னால், அது எவ்வாறு நடந்தது, அவர்களைக் கொன்றது யார் என்ற அனைத்து விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். காணாமல் போனவர்கள் சம்பந்தமான விடயத்தை கையாள்வதற்கு பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட அமைப்பு என்ற வகையில் இது உங்களது பொறுப்பாகும். அந்த இரு தோழர்களையும் கடத்தி காணாமலாக்கியது தொடர்பாக ஹபயாஸ் கோபர்பஸ் மனு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இன்னும் விசாரனையில் உள்ளது.
எனவே, மரண சான்றிதழ்களை வழங்கி மனிதநேய மரபுநெறிகளுக்கு எதிரான செயல்களை அரசியல் குற்ற வரலாற்றில் புதைத்துவிடுவதற்குப் பதிலாக, லலித் மற்றும் குகன் தோழர்கள் உட்பட அனைத்து காணாமலாக்கல்கள் சம்பந்தமாகவும் வெளிப்படையாக விசாரணை நடத்தி அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை சமூகத்திற்கு வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்களின் வரிப்பணத்தினால் நடாத்திச் செல்லப்படும் நிறுவனம் என்ற வகையில் மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு பெரும் பொறுப்பு உண்டு என்பதை நினைவூட்டுகிறோம்.
நன்றி.
புபுது ஜயகொட
முன்னிலை சோஷலிஸக் கட்சி
2020 பெப்ரவரி 07
Related News