Posted on 10.25.2020 by Farook in Foreign News with 0 Comments
இரு வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் பொலிஸ{க்கு எதிராக கிளம்பியுள்ள மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்காக ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களத்தையும் ஆயுத பலத்துடன் களமிறக்க அந்நாட்டு பொலிஸ் தலைவர் தீர்மானித்துள்ளார்.
போலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்களினால் இது வரை 69 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் புஹாரி கூறுகிறார். இறந்தவர்களில் அநேகமானோர் பொது மக்களாகும். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இளைஞர்களே முன்னெடுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
பொது மக்கள் சட்டத்தை கையிலெடுத்திருப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாதென நைஜீரிய பொலிஸ் தலைவர் கூறுகிறார். துப்பாக்கிகளால் சுட்டு பொது மக்களை பச்சை பச்சையாக படுகொலை செய்வதாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகின்றனர்.
Sars Unit என அழைக்கப்படும் விசேட பொலிஸ் பிரிவை கலைக்குமாறு வற்புறுத்தி ஒக்டோபர் 7ம் திகதி இந்த நாடு தழுவிய மக்கள் எழுச்சி ஆரம்பமாகியது.
இதில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு துன்புறுத்தல், கடத்தல், பயமுறுத்தல், சித்திரவதை போன்றவற்றோடு சட்டத்திற்கு புறம்பாக கொலையும் செய்வதாக நீண்டகாலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. பின்னர் அந்நாட்டின் அதிபர் மொஹம்மது புஹாரி இந்தப் பிரிவை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும் ஆர்ப்பாட்டம் குறைந்ததாகத் தெரியவில்லை.
நைஜீரியாவின் பெரிய நகரமான லாகோஸில் ஆயுதம் ஏந்தாத அமைதியான எதிர்ப்பாக ஆரம்பமாகிய இந்த மக்கள் எழுச்சியானது ஏற்கனவே வன்முறைக்கு திரும்பியுள்ளது..
தலைநகர் லாகோஸின் சகல வியாபார நிலையங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அரசாங்க விநியோகங்களை களஞ்சியப்படுத்தியுள்ள இடங்கள் தற்போது அவர்களது இலக்காக ஆகியுள்ளது. இங்கு மக்கள் உணவுக் களஞ்சியங்களை கொள்ளையிடுவதையும் காணக்கூடியதாக இருந்தது
கோவிட் -19 வைரஸ் காரணமாக முடங்கியுள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வைத்திருந்த உணவுப் பொருட்கள் இந்தக் களுஞ்சியங்களில் வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.