Posted on 11.29.2020 by Farook in Local News with 0 Comments
இலங்கையில் நடந்த உள்நாட்டு யுதத்தத்தின் போது காணாமல் போனவர்களாகக் கருதப்படும் நபர்களினது பெயர்ப் பட்டியலொன்றை காணாமல் போன ஆட்கள் சம்பந்தமான அலுவலகம் (Office on Missing Persons – OMP) முதன் முறையாக வௌியிட்டுள்ளது. 2020 நவம்பர் 26ம் திகதி வௌியிடப்பட்டுள்ள இந்த பெயர் பட்டியலின் அடிப்படையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இலஙகை அரசாங்கத்தினால் இழப்பீடு வழங்கப்படல் வேண்டுமெனவும், பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட வேண்டுமெனவும் அம்னெஸ்டி இன்டர்நேசனல் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
மேற்படி பெயர் பட்டியலில் காணாமால் போனவர்களாகக் கருதப்படும் நபர்களின் எண்ணிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளதா என்ற ஊடக நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்த காணாமல் போனோர் சம்பந்தமான அலுவலக செய்தியாளர் ‘ தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் மாத்திரமே தகவல்களை வழங்க முடியுமெனக் கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் மற்றும் அரசியல் அமைதியின்மை காரணமாக, மோதல்களின் போது உத்தியோக ரீதியில் கணக்கிடப்படாத நபர்களும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அம்னஸ்டி இன்டர்நேசனல் கூறுகிறது.
சாமானிய குடிமக்கள் மற்றும் காணாமல் போனவர்களாகக் கருதப்படும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸை சேர்ந்தவர்களும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காணாமல் போனோரின் அலுவலகத்திற்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏற்றுக் கொள்ளக் கூடிய சாட்சிகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டுமென அம்னெஸ்டி இன்டர்நேசனல் பொதுச் செயலாளர் டேவிட் கிரிபின்டஸ அறிவிக்கிறார்.