සිංහල
English
Contact
Monday 21st September 2020    
​கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மு.சோ.கட்சியின் ஆலோசனைகளை பிரதமருக்கு அனுப்பியது « Lanka Views

​கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மு.சோ.கட்சியின் ஆலோசனைகளை பிரதமருக்கு அனுப்பியதுதற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவி  வருவதன் காரணமாக மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை அகற்றவும், தொற்று நோய் பரம்பலை தடுப்பதற்கும் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளில் உள்ள சில குறைபாடுகள் தொடர்பில் அவதானித்து முன்னிலை சோஷலிஸக் கட்சியானது அக்கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினத்தின் ஒப்பத்துடன் சில முன்மொழிவுகளை முன்வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு கடிதமொன்றை நேற்று (24) அனுப்பியுள்ளது. அக்கடிதம் வருமாறு-,
‘மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள்,
பிரதமரின் அலுவலகம்.
இலக்கம் 58,
சர். ஆனஸ்ட் த சில்வா மாவத்தை,
கொழும்பு  -07
பிரதமர் அவர்களே,
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான சில ஆலோசனைகள்

கோவிட் – 19  அல்லது கொரோனா வைரஸ் பரம்பல் காரணமாக உலகில் மிகப்பெரும் நெருக்கடி தோன்றியுள்ளது. இந்த நிமிடம் வரை 192 நாடுகளில் மூன்றறை இலட்சம் மக்கள் வைரஸின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களில் 15,000 பேர் இறந்துள்ளனர். நோய் தொடர்ந்தும் பரவிக்கொண்டிருக்கிறது. என்றாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கும், நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சுகமடையச் செய்யவும் பாரிய தலையீடு அவசியமாக உள்ளதுடன், இது விடயத்தில் அரசாங்கத்தின் கடமை இன்றியமையாததாகும். ஆனால், இந்த வைரஸ் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின்போது அரசாங்க செயற்பாட்டில் தாமதத்தையும், சில பலவீனங்களையும் காண முடியும். எதிர்கால செயற்பாடுகளை சரியாக மேற்கொள்வதற்காக அந்த பலவீனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு காரணிகளால் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலை அவசரமாக முடித்து வைக்கும் அரசியல் தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. பாடசாலைகளையும் பல்கலைக் கழகங்களையும் மூடுதல், பொது பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான இடங்களை மூடுதல் போன்ற செயற்பாடுகளைப் பார்க்கும்போது தேர்தல் நடத்துவதற்கான ஆற்றல் கிடையாது என்பது தெரிகிறது. தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடைத்த முதலாவது நிமிடத்திலேயே தேர்தல் பிற்போடப்பட்டதை பார்க்கும்போது தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்பதும் தெரிகிறது. ஆனால், தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி உட்டப அரசாங்க முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் அறிவித்து வந்தனர். தேர்தலுக்காக சமூக மனநிலையை தயாரித்தார்களேயன்றி தொற்று நிலைமைக்கு முகம்  கொடுப்பதற்கு அவ்வாறான முன்னேற்பாடுகள் செய்யத் தவறியதற்கு அரசாங்கத்தின் இந்த அரசியல் அதிகார நிகழ்ச்சி நிரலுக்கு முன்னுரிமை வழங்கியமைதான் காரணம். அத்தருணத்தில் கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கபடாமையினால் இந்தப் பிரச்சினை நீண்ட தூரம் சென்றதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறோம். தொற்று நோய் பரம்பலை தடுப்பதற்காக நாடுபூராவும் சில நாட்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த கடந்த வாரம் பூராவும் அரசாங்கம் கவனம் செலுத்திய போதிலும், இது சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டாமை மிகப் பெரிய பிரச்சினையாகும். ஏற்கனவே விழிப்புணர்வூட்டியிருந்தால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருந்திருப்பார்கள். ஆனால், மார்ச்ச 20ம் திகதி மாலையிலிருந்து நாடுபூராவும் இரண்டு நாட்களுக்கு மேல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென அன்று காலையில் திடீரென அறிவித்தமையால் சன நெரிசலும், அமைதியின்மையும் ஏற்பட்டது. அன்றைய தினம் வியாபார நிலையங்களிலும், பொது இடங்களுலும் அனாவசிய நெரிசல் ஏட்பட்டமையால் வைரஸ் பரம்பலுக்கான ஆபத்து அதிகமானது.  தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவு பெறும் வரை இது சம்பந்தமாக முன்னேற்பாடுகள் செய்யும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் மக்களுக்கு  வழங்கவில்லை என்பது தௌிவு.  அதன்போது, மக்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தை விட அரசியல் அதிகார நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் நோக்கத்திலேயே அரசாங்கம் செயற்பட்டது.

இலங்கைக்குள் விமானங்கள் வருவதை தடுத்தல், வௌிநாடு சென்று இலங்கைக்கு வரும் இலங்கையர்களை கூட்டாக தனிமைப்படுத்தும் செயற்பாதடு தாமாதல் ஆகியன இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகளாகும். பின்னர் பல நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் போது சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கு உட்படுத்தாமையும் ஒரு குறைபாடாகும். அதேபோன்று, அரசாங்கம் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், பல தனியார் நிறுவனங்கள், விசேடமாக  ஆடைத் தொழிற்சாலைகள் தமது ஊழியர்களை பணிக்கு அழைத்திருந்தமையினால்  நோய் பரவும் ஆபத்து அதிகரித்தது. ஆனால், அதன்போது அரசாங்கம் தலையிட்டு அதனை தடுக்கவும், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்காமை நோய் பரம்பலை தடுப்பதில் தவறான செயலாகும்.

அதேபோன்று, நாளாந்த வருமானத்தில் வாழும் முறைசாராத துறைகளில் பணியிலுள்ள மக்களின் இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு சில நாட்களுக்குப் போதுமான உணவுப் பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்வதற்கான பொருளாதார வசதிகள் இல்லாமை மற்றும் அவர்களுக்கு அத்தியவசியமான உணவுக் கூப்பன் உட்பட சமூக நலனோம்புகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை பிரச்சினையாகும். நோய் பரம்பலை தடுப்பதற்கு அரசாங்கம் இவ்வாறு செயற்படும்போது, அதற்குச் இணைாக அவ்வாறான நடவடிக்கையினால் கஷ்டத்திற்கு ஆளாகும் மக்களுக்காக நிவாரண செயற்பாடொன்றை அரசாங்கம் முன்னெடுத்திருக்க வேண்டும்.

இலங்கையானது இவ்வாறான அனுபவங்களுக்கு பொதுவாக முகம் கொடுத்ததில்லை என்பதால் சில குறைபாடுகள் ஏற்படுவதை எதிர்ப்பார்க்க முடியும். அப்படியான குறைபாடுகள் தொடர்பில் எமக்கு விமர்சனம் கிடையாது. அரசியல் நிகழ்ச்சி நிரல் முன்னிலைக்கு வந்தமையால் ஏற்பட்ட குறைபாடுகள் சம்பந்தமாகவே  எமது விமர்சனம் உள்ளது.  இவ்வாறான விமர்சனங்கள் இருக்கும் நிலையில் கொரோனா பரம்பலை தடுக்கவும், தனிமைப்படுத்தலுக்காகவும், நோயாளிகளை சுகமடையச் செய்யவும் கூடியளவு ஒத்துழைப்பு வழங்க முன்னிலை சோஷலிஸக் கட்சி தயாராக இருப்பதை அறியத் தருகிறோம். இதுவரை ஏற்பட்ட குறைபாடுகளை இனி வரும் காலங்களில் சரி செய்துக் கொண்டு  நோய் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்கவும், அதன்போது, மக்கள் முகம் கொடுக்கும் இடையூறுகளை குறைப்பதற்கும் கீழ்வரும் முன்மொழிவுகள் விடயத்தில் கவனம் செலுத்துமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

1. இவ்வாறான தொற்று நோயை கட்டுப்படுத்தும் விடயத்தில் சுகாதார ஊழியர்களின் கடமை தீர்க்கமானதாக இருப்பதுடன், அதற்குத் தேவையான வசதிகளை முழுமையாக நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்புடமையாகும். அரசாங்க வைத்தியசாலைகளில் ஏற்கனவே பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழிய அலுவலர்களின் உறுப்பினர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உடைகள் உட்பட பொருட்களுக்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் முகக் கவசங்கள் மற்றும் கண்களை மறைக்கும் பொலிதின் மறைப்புகளுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. சுகாதார அலுவலர்களின் சேவைக்கு போக்கு வரத்தும் பாரிய பிரச்சினையாக உள்ளது. இவை குறித்து உடனடி கவனம் செலுத்தி சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.

2. இத்தகைய தொற்றுநோய் பரம்பலின்போது நோயாளர்களை அடையாளம் காணுதல், நோய் பரம்பலை கட்டுப்படுத்ல் மற்றும் சுகப்படுத்தல் ஆகிய முதல் மூன்று கட்டங்களில் முதல்  இரு கட்டங்கள் மாத்திரமே குறைபாடுகளுடனாவது செயற்படுகின்றன. என்றாலும் நோயாளர்களை சுகப்படுத்தும் கட்டம் ஆபத்தான நிலையிலேயே உள்ளது. இலங்கையில் சுகாதாரச் சேவைக்குரிய வளங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியிருந்தால் அவர்களுக்கான  தனிமைப்படுத்தும் அறைகள் (Isolation Rooms),  வென்டிலேட்டர்கள் (Ventilators)மற்றும் ஐ.சி.யூ படுக்கைகள் (ICU Beds)  போன்ற வசதிகள் தற்போது இல்லை. அந்த வசதிகளை ஏற்படுத்த உடனடி நடவடிக்கை  எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.  இதற்காக, இலவச சுகாதார சேவையை விரிவுபடுத்த வேண்டும் மற்றும் போதுமான மானியங்கள் ஒதுக்கீடு செய்து தேவையான வளங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும். சுகாதார சேவைகளின் போதிய மானியங்கள் ஒதுக்கப்படாமை தொடர்பில் அவ்வப்போது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. சுகாதார சேவையின் இந்த பலவீனத்தின் அளவு அந்த நீண்டகால வெட்டின் தவிர்க்க முடியாத விளைவாகும். கொரோனா வைரஸ் தொற்று இருந்த நிலையிலும் மார்ச் 8 ம் திகதி கூடிய அமைச்சரவை, சுகாதார சேவைகளுக்கு கூடுதலாக ரூ .500 மில்லியனை ஒதுக்கியிருந்தது. இந்த சூழ்நிலையில், சுகாதாரத்திற்கான மானியங்கள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், சுகாதார சேவையை விரிவுபடுத்துவதற்கு தனியார் மருத்துவமனைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுக்க வேண்டும். எங்களது ஆலோசனை என்னவென்றால், தனியார் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை கொரோனா நோயாளிகளின் சார்பாக கட்டணம் இல்லாமல் பயன்படுத்த கையகப்படுத்த வேண்டும்.  மேலும், கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

3. கொரோனா நோயாளிகளை குற்றவாளிகளாக உணர்த்தும் விதமாக சித்தரித்து அவர்களை பிடிக்கும் உளவுச் சேவை நடவடிக்கைகள் ஆகியவற்றை ஊடகங்கள் அறிவித்ததைப் போன்று கொரோனா நோய் மற்றும் நோயாளிகள் சம்பந்தமாக சமூகத்தில் தவறான எண்ணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படியான அனாவசிய அச்சத்திற்கு இணையாக பொறுப்பற்ற தன்மையொன்று சமூகத்தில் நிலவுகிறது. ஒட்டுமொத்த சமூகம் சம்பந்தமான பொறுப்பின்றி நினைத்தவாறு தீர்மானமெடுக்கும் நிலை சமூகத்தில் திடீரென உருவாகவில்லை. நீண்ட காலமாக சமூகத்தில்  போதிக்கப்பட்டவற்றின் விளைவுதான் இது. இந்த நிலையில்  கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கையை சமூக பங்கேற்பாகக் கொள்ளுதல் மற்றும் வெகுசன கல்வி நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுத்தல் அத்தியாவசியமாகும். அதற்கு பொது சுகாதரப் பரிசோதகரின் சேவை, குடும்ப சுகாதார சேவை, துறைசார் மருத்துவ அதிகாரிகளின் சேவை உட்பட மக்கள் சுகாதார சேவை வலையமைப்பை செயல் ரீதியில் பங்கேற்கச் செய்தல் வேண்டும்.

4. மார்ச் 16ம் திகதியிலிருந்து விடுமுறை அறிவிக்கப்ட்டதோடு, மார்ச் 20ம் திகதியிலிருந்து, சிறு இடைவௌி விட்டு ஊடரங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளது. இதன் காரணமாக பலரின் அன்றாட பொருளாதார நடவடிக்கைள் வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் நாளாந்தம் கூலி வேலை செய்பவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், மனிதவளத் தொழிலாளர்கள், சுய தொழில் செய்வோர், சிறி தொழிலதிபர்கள், சிறு வியாபாரிகள் ஆகிய முறைசாரா தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களாகும். மீனவர்கள், சுற்றுலாத் துறையில ஈடுபட்டுள்ளவர்கள் ஆகிய பிற சமூகங்களும் பெரும் ஆபத்தில் உள்ளனர். அவர்கள் தமது குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வது கூட கடினமாக உள்ளது. இதனை அவசர அனர்த்த நிலையாகக் கருதி அந்தக் குடும்பங்களுக்கு அத்தியாவசியமான உணவுக் கூப்பன் உட்பட நிவாரணம் வழங்க வேண்டுமென்பதே எமது முன்மொழிவாகும். மக்களின் கடன் தவனை மற்றும் குத்தகைத் தவனை சம்பந்தமாக அரசாங்கம் வழங்க எதிர்பார்க்கும் சலுகை இந்நேரத்தில் அத்தியாவசியமாகும் என்பதுடன், அதனை உண்மையிலேயே யதார்த்தமாக்க நிதி நிறுவனங்களுடன் தொடர்ச்சியான செயற்பாடு தேவைப்படுகிறது. அரச நிறுவனங்கள் வழங்கும் மின்சாரம், நீர் மற்றும் பிற வசதிகளுக்கான கட்டணம் செலுத்தும் கால எல்லையை நீடித்தல், துண்டிப்பதை சில காலங்களுக்கு நிறுத்துதல் ஆகியன நல்ல அனுகு முறையாக இருப்பதுடன், அதனை தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் வரை விரிவுபடுத்த வேண்டுமென நாம் முன்மொழிகிறோம்.

5. வைரஸ் பரவுவதை குறைக்க, ஒரே இடத்தில் அதிகமான மக்கள் கூடுவதை தடுப்பது முதன்மை கடமையாக இருப்பதுடன், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் கூட ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்துவிட்டு வலுக்கட்டாயமாக பணியில அமர்த்தும் சில தனியார் நிறுவனங்கள் கடுமையான சவாலாக உள்ளன. விசேடமாக சில ஆடைத் தொழிற்சாலைகள் சரியான சுகாதார வசதிகள் இல்லாமல் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றன. இதுபோன்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து உழைக்கும் மக்களின் சுகாதார உரிமைகளைப் பாதுகாக்க தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேபோன்று சில நிறுவனங்கள் தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தை, அடிப்படை சம்பளத்தையும் கொடுப்பனவையும் சேர்த்தே சம்பளமாக வழங்குகின்றன. சில நிறுவனங்களில் அடிப்படை சம்பளம் மிகக் குறைவாகும். கொடுப்பனவு இல்லாமல் வாழ்வது கூட கஷ்டம். ஆகவே, தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும்போது அவர்களின் மாதச்சம்பளம் பெரியளவில் குறையாதவாறு வழங்க தொழில் ஆணையாளர் மற்றும் பொறுப்புள்வாய்ந்த நிறுவனங்கள் தலையீடு செய்ய வேண்டுமெனவும் நாம் முன் மொழிகிறோம்.

6. இலங்கையின் உழைப்புப் படையணியில் கணிசமான பகுதியினர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். வௌி நாடுகளிலுள்ள இலங்கை உழைப்பாளர்கள்  அனுப்பும் பணம் பிரதான வௌிநாட்டுச் செலவானியாகும். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதால்,  பல்வேறு நாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பிற தேவைகளுக்காக அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் இராஜதந்திர அலுவலர்களை  திறமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.ஐரோப்பா மற்றும் நோய் பொதுவாக உள்ள பிற நாடுகளில் தூதரக தலையீடுகள் போதுமானதாக இல்லை. அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பணிபுரியும் மத்திய கிழக்கில் உள்ள தூதரகங்களின் தலையீடு மிக்க் குறைவாகும். துபாய், கத்தார், லெபனான், ஓமான் மற்றும் ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தொழிலாளர்கள், குறிப்பாக வீட்டுத் தொழிலாளர்கள் மீது கூடுதல் தலையீடு செய்யப்பட வேண்டும். ஆகவே  தூதரக  சேவையில் அவசரகால திட்டத்தை தொடங்குமாறும் நாங்கள் முன்மொழிகிறோம்.

மேற்படி துறைகளிலுள்ள திட்டங்களுக்கு மேலதிகமாக கவனிக்கப்பட வேண்டிய மேலும் பல துறைகள் இருந்தாலும்,  இந்த விஷயத்தில் ஒரு முக்கிய தேவை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், மேலும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகள், சவால்கள் மற்றும் திட்டங்கள் சம்பந்தமாக  உங்கள் அரசாங்கத்தின் அவதானிப்பை எதிர்பார்க்கறோம்.  . இந்த முன்மொழிவுகள் குறித்து அரசாங்கத்திடமிருந்து விரைவான பதிலை எதிர்பார்க்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு

குமார் குணரத்னம்

பிரதான செயலாளர்

முன்னிலை சோஷலிஸக் கட்சி

2020.மார்ச் 24

 
Related News