සිංහල
English
Contact
Tuesday 15th June 2021    
Covid 19- அடுத்து வரும் தாக்குதலுக்குத் தயாராவோம்! « Lanka Views

Covid 19- அடுத்து வரும் தாக்குதலுக்குத் தயாராவோம்!இலங்கையில் கொரோனா தொற்றுக்கு எதிராக செயற்படுவதில் முன்னணியில் உள்ளவர்கள் சுகாதார ஊழியர்கள்தான் என்பதை புதிதாக சொல்ல வேண்டியதில்லை. இரவு பகல் பாராமல் செயற்படும் அவர்கள் Covid 19 வைரஸுக்கு பலியானால் ஏற்படக் கூடிய நிலைமை எப்படியிருக்கும்? யாரையும் பயமுறுத்துவதற்காக இப்படி கூறவில்லை. இத்தாலியில் வசிக்கும் ஒரு இலங்கையர் இத்தாலியின் அனுபவங்களைக் கொண்டு முன்வைக்கும் எதிர்வுகூறலாகும். கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு சமூகம் என்ற வகையில் இணைந்து போராடுவதோடு, அடுத்து வரப்போகும் தாக்குதலுக்கும் நாம் தயாராக வேண்டும். இத்தாலியிலிருந்து “லங்காவீவ்ஸு”க்கு இந்த ஆக்கத்தை எழுதிய ‘ஹில்மி சுபுன்’ இதைத்தான் வலியுறுத்துகிறார்.

(உசாத்துணையின்போது ஆசிரியரின் உரிமையை பாதுகாக்கவும்)

கொரோனா வைரஸுக்கு எதிராக பணியாற்றும்  சுகாதார ஊழியர்களை பாதுகாப்பது இலங்கை அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். கொரோனா வைரஸ் பெருமளவில்  பரவியுள்ள நாடுகள் எதிர்கொண்டுள்ள பிரதான நெருக்கடியானது சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள்  இந்த வைரஸுக்கு வேகமாக பலியாவதுதான். நோயாளிகளுடன் நேரடியாக உறவாடும் அவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை முடிந்தளவு ஏற்பாடு செய்து கொடுக்கத் தவறும் பட்சத்தில், இத்தாலியைப் போன்று துயர நிலைக்கு இலங்கையும் முகம் கொடுக்க நேரிடும்.

வைரஸ் வேகமாக பரவாத நிலையில் வெற்றிக்களிப்பினால் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியுமென்றாலும், சிலவேளை வைரஸ் வேகமாகப் பரவும் நிலை ஏற்பட்டால், எதிர்வரும் சில நாட்களுக்காவது முகம் கொடுக்க இலங்கையால் முடியுமா? எமக்கு முன்னாலுள்ள பாரிய பிரச்சினை இதுதான். ஆபத்திற்கு முன்பு எச்சரிக்கைக்கான குறிப்பு.

இத்தாலியை சற்று திரும்பிப் பார்ப்போம்.

ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் சுகாதார சேவை சிறப்புற்று இருந்த நாடு என்ற வகையில் இத்தாலியை குறிப்பிட முடியும். ஒ​வ்வொரு நபருக்கும் தனிப்பட்ட மருத்துவர், சகல வசதிகளும் நிறைந்த வைத்தியாசாலை தொகுதி, போதுமானளவு மருத்துவர்களும், தாதியர்களும் இத்தாலிய சுகாதாரச் சேவைக்குள் இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் எதிர்பாராத பாய்ச்சலுடன்  ‘லொம்பர்தியா’ மற்றும் ‘வென தோ’ மாகாணங்களுக்கு வேகமாகப் பரவும்போது  அந்த மாகாணங்களிலிருந்த வைத்தியசாலையின் கொள்ளளவையும் தாண்டி நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வரத் தொடங்கினர். இந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது,  தற்காலிக வசதிகளுடன் வைத்தியசாலைகள் புதிதாக கட்டப்பட்டன. இறுதியில் வைரஸ் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்படாத   நோயாளிகளை அவர்களது வீட்டிலேயே வைத்து சிகிச்சையளிக்கும் நிலைக்கு இத்தாலி தள்ளப்பட்டது. அது மட்டுமல்ல, யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்ற பிரச்சினைக்கும் மருத்துவர்கள் முகம் கொடுத்தார்கள். செயற்கை சுவாசக் கருவிகளை எந்த வயதிற்கிடைப்பட்டவர்களுக்கு பொருத்துவது என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது.

இந்த முன்னேறிய நாடுகளுக்கு, பலவீனமான நாடொன்றை ஒரே நிமிடத்தில் தாக்கி சுக்குநூறாக்கி மனிதர்களை கூட்டுப் படுகொலை செய்து அந்நாட்டை கைப்பற்றும் ஆற்றல் இருந்தாலும், இத்தகைய பேரழிவின்போது மனிதர்களை காப்பாற்றத் தேவையான சுகாதார பாதுகாப்பு செயற்திட்டம் அந்நாடுகளுக்குக் கிடையாது. மாகாண ஆட்சிக்கும் அரசாங்கத்திற்குமிடையில் நடக்கும் இழுபறி வரை, அவர்களுக்கு மனித உயிர்களைவிட பணம்  மதிப்புவாய்ந்ததாக இருந்தது. குறிப்பிட்ட வேலைத்திட்டத்துடன் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான செயற்திட்டம் அவர்களிடம் இல்லை.

 இத்தாலியின் உத்தியோக அறிக்கைகளுக்கமைய மார்ச் 26ம் திகதி ஆகும்போது 36 மருத்துவர்கள் இறந்துள்ளனர். 6205 சுகாதார ஊழியர்கள் Covid-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு ஆளான மொத்த எண்ணிக்கையில் இவர்கள் 9% மாகும்.   நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும், தாதியர்களும் இந்த வைரஸுக்கு பலியாவதுதான் இத்தருணத்தில் இத்தாலி  முகம் கொடுக்கும் பாரிய சவாலாகும்.

ஆகவே,  எதிர்காலத்தில் இதே பிரச்சினையை எதிர்கொள்ள  இலங்கையும் தயாராக வேண்டிய நிலை ஏற்படக் கூடும் என்பதை இப்போதைக்கு வலியுறுத்த வேண்டியுள்ளது.
Related News